திருவண்ணாமலை, டிசம்பர்-3 – தமிழகத்தின் திருவண்ணாமலையில் கனமழையின் போது மண்ணரிப்பு ஏற்பட்டு பாறைகள் சரிந்து வீடுகள் தரைமட்டமானதில் எழுவர் உயிரிழந்துள்ளனர்.
மண்ணில் புதையுண்டவர்களில் இதுவரை ஐவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அடையாளம் தெரியாத அளவுக்கு உடல்கள் உருக்குலைந்து போயிருப்பதால், மேலுமிருவர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என மீட்புக் குழுவினர் கூறினர்.
இறந்தவர்கள் கணவன் – மனைவி மற்றும் 5 சிறார்கள் ஆவர்.
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலையில் டிசம்பர் 1-ம் தேதி இரவு முதல் கனமழை கொட்டியது.
அப்போது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
மலையில் இருந்து கற்கள், 40 டன் எடையிலான ராட்சத பாறைகள் உருண்டு வந்து மலையடிவாரத்திலிருந்த 3 வீடுகள் மீது விழுந்ததில் அவை தரைமட்டமாகின.
வீட்டினுள் சிக்கிக் கொண்ட எழுவரை தேடி மீட்க முழு வீச்சில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அடைமழை பெய்ததாலும், இருட்டாக இருந்ததாலும் மீட்புப் பணிகள் சிரமத்தை எதிர்நோக்கின.
அதோடு பாறைகளை அகற்றினால் மேலும் மண் சரிவு ஏற்படலாம் என்பதாலும் மீட்புப் படை கவனமாக இருக்க வேண்டியதாயிற்று.
இந்நிலையில் இடைவிடாமல் மழைப் பெய்தாலும் எஞ்சிய இருவரது உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.