
கோலா திரெங்கானு, ஆகஸ்ட் 6 – இளைஞர்கள் மற்றும் திருமணமாகாத பெண்கள் தங்களுக்கேற்ற வாழ்க்கைத்துணையை எளிதில் தேர்வு செய்யும் வகையில், திரெங்கானு அரசு “போர்டல் ஜோடோ டாருல் இமான் (Portal Jodoh Darul Iman)” என்ற புதிய ஆன்லைன் திருமணப் பொருத்தப் ‘போர்டல்’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இம்முயற்சி மாநில திருமண விகிதத்தையும், பிறப்பு விகிதத்தையும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் எனவும் திரெங்கானு வயது முதிர்ந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருப்பதைத் தவிர்க்கவும் செய்யும் என்று மாநில நலன், பெண்கள் மேம்பாடு, குடும்பம் மற்றும் தேசிய ஒற்றுமைக் குழுத் தலைவர் மாலியமான் காசிம் கூறியுள்ளார்.
தற்போது இந்தப் போர்ட்டலை முஸ்லீம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் காலப்போக்கில் அதி மாற்றங்கள் ஏற்படலாமென்றும் அறியப்படுகின்றது.
2024ஆம் ஆண்டிற்கான ஆரம்பக் கட்ட இலக்காக 500 பங்கேற்பாளர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் திருமணமாகாத நபர்கள், ஒற்றை தாய்மார்கள் மற்றும் தந்தையர்களும் பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கேற்பாளர்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்களைப் போர்ட்டலில் பதிவு செய்வதைத் தொடர்ந்து திருமண ஆலோசகரின் துணையுடன் முதலாவது சந்திப்பும் ஏற்பாடு செய்யப்படும்
பின்னர், நிச்சயதார்த்தம் மற்றும் திருமண விவரங்கள் அவரவர் குடும்ப உறுப்பினர்களால் நிர்ணயிக்கப்படும்.
தகவல் மோசடி மற்றும் தவறான பயன்பாட்டைத் தவிர்க்க, பதிவு செய்யும் நபர்கள் அடையாள அட்டை எண் உள்ளிட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும் என்றும் தவறான தகவல் அளிக்கும் பங்கேற்பாளர்கள் போர்டலிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.