
கோலாலம்பூர், மார்ச்-12-வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைக்கான அவசியம் குறித்து அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது.
நாளைய சிறப்பு அமைச்சரவை கூட்டத்திலேயே கூட அது விவாதிக்கப்படலாம் என, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
WFH நடைமுறை, எரிசக்தி பயன்பாட்டை குறைக்க உதவலாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகிலிருந்தே உலக நாடுகளில் அது அமுலில் உள்ள ஒன்றுதான்.
மலேசியாவிலும் ஏராளமான தனியார் நிறுவனங்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றி வருவதாகக் கூறிய ஃபாஹ்மி, எந்த முடிவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்காமல் எடுக்கப்படும் என சொன்னார்.
மத்தியக் கிழக்கில் நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் எரிசக்தி சவால்களைத் தொடர்ந்து, தாய்லாந்தில் அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் சலுகை வழங்கப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் கருத்துரைத்தார்.



