
கோலாலாம்பூர் – ஜூலை-16 – மறைந்த துன் வீ.தி. சம்பந்தன் மலேசியாவின் ‘இனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் சிற்பி’ என தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் (Aaron Ago Dagang) வருணித்துள்ளார்.
சம்பந்தனின் சேவைகளும் அர்ப்பணிப்பும் மலேசியர்களால் நினைவுக் கூறப்பட வேண்டியது மட்டும் அல்ல; மாறாக இளம் தலைமுறையினரின் பேச்சிலும் செயலிலும் ஆத்மார்த்தாக வெளிப்பட வேண்டும் என்றார் அவர்.
ம.இ.காவின் முன்னாள் தேசியத் தலைவருமான துன் சம்பந்தன், நாட்டின் வரலாற்றில் ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சரராக நியமிக்கப்பட்ட முதல் மலேசியர் ஆவார். 1972 முதல் 1974 வரை அப்பதவியில் இருந்த போது, தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் கொள்கைளை அறிமுகப்படுத்தினார்.
அடிதட்டு மக்களுக்கும் கல்வி வாய்ப்பு, தோட்டத் தொழிலாளர்களின் உரிமை, புறநகர் பகுதி மக்களையும் சமமாக நடத்தி அவர்களை வலுப்படுத்த மேற்கொண்ட சீரிய மூயற்சிகளால் அவர் இன்னமும் நினைவுக் கூறப்படுகிறார்.
அந்த மாபெரும் தலைவரைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பேசிய போது டத்தோ ஏரன் அகோ அவ்வாறு கூறினார்.
Arkib Negara Malaysia வாயிலாக ஒருமைப்பாட்டு அமைச்சு பெட்டாலிங் ஜெயாவில் அந்நிகழ்வை நடத்தியது. அதில் சிறப்பம்சமாக, Tun V.T.Sambanthan Speaks எனும் நூலையும் Arkib Malaysia வெளியிட்டது.
மலாயா/ மலேசியா அமைச்சரவையில் பணியாற்றிய போது அவராற்றிய உரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
இவ்வேளையில், துன் சம்பந்தனின் வரலாறு மற்றும் சேவைகள் குறித்து பேச்சுபோட்டி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Arkib Negara மற்றும் தேசிய நில நிதி கூட்டுறவுக் கழகத்தின் ஒத்துழைப்பில் வரும் நவம்பர் மாதம் அப்போட்டி நடைபெறுகிறது.