
ஜோகூர் பாரு, ஜூலை-5 – உடலில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஓர் ஆடவரின் சடலம் ஜோகூர் பாரு சுல்தானா அமீனா மருத்துவமனையில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவோர் அடையாள ஆவணமுமின்றி அச்சடலம் கண்டெடுக்கப்பட்டதாக வியாழக்கிழமை அதிகாலை 1.40 மணிக்கு போலீஸுக்குத் தகவல் கிடைத்ததை, மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார் உறுதிப்படுத்தினார்.
கருப்பு நிற வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், அச்சடலத்தை அங்கே விட்டுச் செல்வது, மருத்துவமனை வளாகத்தில் உள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இறந்துபோனவர் கெடா, சுங்கை பட்டாணியைச் சேர்ந்த 42 வயது இந்திய ஆடவர் என்பது கை விரல் ரேகை பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
அவருக்கு ஏற்கனவே 4 குற்றப்பதிவுகளும் இருக்கின்றன.
நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் பல முறை சுடப்பட்டதில் அவர் உயிரிழந்தது சவப்பரிசோதனையில் உறுதியானது.
இவ்வேளையில் இச்சம்பவத்துக்கும், நள்ளிரவில் கேலாங் பாத்தா எண்ணெய் நிலையத்தில் நிகழ்ந்த கொள்ளை முயற்சி சம்பவத்துக்கும் தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது.
அதில் பாராங் கத்தி ஏந்திய கும்பல், கைத்துப்பாக்கி ஏந்திய கும்பலைத் தாக்கபோன போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸ் அன்றிரவே, 2 உள்ளூர் ஆடவர்களையும், ஓர் இந்திய பிரஜையையும் கோலாலம்பூர் டாங் வாங்கியில் கைதுச் செய்தது.
அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கியும், தோட்டாக்களும் சில ஆவணங்களும் கருப்பு நிற Honda Accord காரும் பறிமுதல் செய்யப்பட்டன.
மூவரும் விசாரணைக்காக 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இறந்துபோனவருக்கும், கைதான சந்தேக நபர்களுக்கும் உள்ள தொடர்பு விசாரிக்கப்பட்டு வருவதாக டத்தோ குமார் கூறினார்.