
ஜோர்ஜ்டவுன், நவம்பர்-9,
பிரபல National Geographic நிறுவனம் வெளியிட்ட பட்டியலில், தென்கிழக்காசியாவில் உணவுகளின் சொர்கத் தீவாக பினாங்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நாசி கண்டார், ச்சார் குவே தியாவ், அசாம் லக்சா என மலாய், சீன, இந்திய கலாச்சார உணவுகள் ஒன்றிணைந்த தனிச்சிறப்பை பினாங்குக் கொண்டுள்ளது.
“சுவை, வரலாறு, சமூக ஒற்றுமை — எல்லாம் ஒரே தட்டில்!” என தனித்துவ அனுபவத்தை பினாங்கு தருவதாக National Geographic வருணித்துள்ளது.
இது குறித்து பெருமிதம் தெரிவித்த சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரத் துறைகளுக்கான பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் வோங் ஹான் வாய் (Wong Hon Wai), பாரம்பரியம் மற்றும் பன்முகத்தன்மையில் வேரூன்றிய உலகளாவிய உணவுத் தலமாக பினாங்கின் நற்பெயரை இந்த அங்கீகாரம் மீண்டும் உறுதிப்படுத்துவதாக சொன்னார்.
“பினாங்கு உணவுகள் நீண்ட காலமாக வெறும் சமையல் அனுபவத்தின் எல்லையைத் தாண்டிச் சென்றுள்ளது” என்று அவர் கூறினார்.
இவ்வேளையில் National Geographic நிறுவனத்தின் அப்பட்டியலில்
அழகான கடற்கரைகளைக் கொண்ட தீவாக தாய்லாந்தின் Koh Chang, சாகசங்கள் நிறைந்த பயணங்களுக்கான சிறந்த தீவாக வியட்நாமின் Cat Ba, வனவிலங்குகளுக்கான தீவாக இந்தோனேசியாவின் Komodo, விழாக்களுக்கான சிறந்த இடமாக பிலிப்பின்ஸ் நாட்டின்
Panay ஆகியத் தீவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.



