
தெமர்லோ, அக்டோபர்-5,
பஹாங்கில் சுமார் 60 வயது முதியவர் ஒருவர், 9.1 மீட்டர் உயரமுள்ள தென்னை மரத்தில் ஏறியபோது மயங்கி விழுந்தார்.
இச்சம்பவம் நேற்று காலை 11 மணிக்கு மேல் தெமர்லோ–மாரான் சாலையிலுள்ள தாமான் ஜெயா 2 பகுதியில் நிகழ்ந்தது.
அந்நபர், தானே உருவாக்கிய சிறப்பு கருவியைப் பயன்படுத்தி தென்னை மரத்தில் ஏற முயன்றபோது, திடீரென சோர்வால் மயங்கி, மரத்தின் மேலேயே சிக்கிக் கொண்டார்.
இதைக் கண்ட கிராம மக்கள் உடனடியாக அவசர உதவி எண்னை தொடர்புகொண்டனர்.
9 வீரர்கள் கொண்ட தீயணைப்பு-மீட்புக் குழு சம்பவ இடம் விரைந்தது.
அவர்கள் தீயணைப்பு வண்டியின் ஏணி மற்றும் கயிற்றைப் பயன்படுத்தி அம்முதியவரை பாதுகாப்பாக கீழிறக்கினர்.
பின்னர் அவர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அந்நபரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.