தெமர்லோவில் குடிக்கத் தண்ணீர் கேட்டு மூதாட்டியை கொள்ளையிட்ட ஆடவன்

தெமர்லோ, அக்டோபர்-24,
பஹாங், தெமர்லோவில் 78 வயது மூதாட்டி ஒருவர் தன் வீட்டில் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை 5 மணியளவில், அடையாளம் தெரியாத ஓர் ஆடவன் வீட்டின் வாசலுக்கு வந்து “தண்ணீர் வேண்டும்” எனக் கேட்டுள்ளான்.
மூதாட்டியும் அவனுக்கு உதவ முயன்றபோது, அந்நபர் திடீரென வீட்டுக்குள் நுழைந்து, அவரை தாக்கி தரையில் தள்ளியதாகக் கூறப்படுகிறது.
கொள்ளையன், மூதாட்டியின் காப்பு மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றுள்ளான்.
இதில் மூதாட்டிக்கு கைகள் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது.
மொத்த இழப்பு சுமார் 1,000 ரிங்கிட் என மதிப்பிடப்படுகிறது.
CCTV கேமரா பதிவுகள் உதவியுடன் போலீஸார் கொள்ளையனை அடையாளம் கண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மூத்த குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், முன்பின் தெரியாதவர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



