
கிள்ளான் டிச 22 – கிள்ளான் , Teluk Panglima Garang கில் உள்ள வர்த்தக வளாகத்தில் கார் நிறுத்துமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த வாகன கண்காட்சி நிகழ்வில், பெரோடுவா மைவி தீப்பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இரண்டு மைவி கார்கள் தீப்பிடித்தன.
அவற்றில் கண்காட்சியில் கலந்துகொண்ட உரிமையாளருக்கு சொந்தமான ஒரு கார் 90 விழுக்காடு எரிந்து பாதிக்கப்பட்டது. மற்றொருவருக்கு சொந்தமான கார் சிறிய அளவில் சேதத்திற்கு உள்ளானது.
இந்த கண்காட்சியில் மாற்றி அமைக்கப்பட்ட மற்றும் அதிக இயந்திர சத்தத்தைக் கொண்ட மைவி கார்கள் கலந்து கொண்டபோது அதனைக் கண்டு பார்வையாளர்கள் பெரும் பரவசம் அடைந்தனர்.
அதன் பின்னர் திடீரென புரோடுவா கார் ஒன்றில் பெரிய அளவில் தீப்பிடித்ததால் நிலைமை மோசமானது. இரவு மணி 9.25க்கு தகவல் அறிந்து தெலுக் பாங்லிமா காராங் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. மைவி காரின் புகை கக்கியில் வெளியான நெருப்பு மற்றொரு காருக்கும் விரைவாக பரவியதை சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட வீடியோ கிளிக்கில் காணமுடிந்தது.
இத்தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரண நடைபெற்று வருவதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கைக்கான துணை இயக்குநர் அகமட் முக்லிஸ் மொக்தார் ( Ahmad Mukhlis Mokhtar ) கூறினார்.
காரை மாற்றி அமைப்பதற்கு பெரிய அளவில் செலவு செய்தவர்கள் தங்களது காரில் தீயணைப்பு கருவியை கொண்டிருக்காதது பெரிய ஏமாற்றம் என கார் உரிமையாளர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்.



