
கோலாலம்பூர், ஆகஸ்ட்-11- தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங்கைத் தலைக் கீழாக பறக்க விடுவது தவறுதான்; அது சட்டப்படி விசாரிக்கப்பட வேண்டும்.
ஆனால், அதற்காக ‘பாடம் நடத்துகிறோம்’ என்ற பெயரில் பகடிவதையெல்லாம் கூடாது என, சீன சமூகத்தைத் சேர்ந்த இரு மத்திய அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஹீரோவாக காட்டிக் கொள்ளும் முயற்சியில் யாரும் குட்டையைக் குழப்பி குளிர் காய வேண்டாம் என தனித்தனியாக வெளியிட்ட அறிக்கைகளில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கும், அறிவியல்-தொழில்நுட்பம்-புத்தாக்க அமைச்சர் சாங் லீ காங்கும் (Chang Lih Kang) கேட்டுக் கொண்டனர்.
சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்; அதை விடுத்து யாரும் இனவாதத்தைத் தூண்டி விட்டு, தேசியக் கொடியை எப்படி சரியாக ஏற்றுவது என்றெல்லாம் பாடமெடுக்க வேண்டிய அவசியமில்லை.
இது பகடிவதைக்குச் சமமாகும் என இரு அமைச்சர்களும் சுட்டிக் காட்டினர். அவர்கள் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும், அவ்வறிக்கைகள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Dr அக்மால் சாலேவுக்குக் கொடுத்த பதிலடியாகவே பார்க்கப்படுகின்றன.
பினாங்கில் ஒரு சீனருக்கு சொந்தமான கடையிலும், நெகிரி செம்பிலானில் ஒரு சீனப் பள்ளியிலும் ஜாலூர் கெமிலாங் கொடிகள் தலைக்கீழாகப் பறக்கவிடப்பட்ட சம்பவங்கள் முன்னதாக சர்ச்சையை ஏற்படுத்தின.
இரு சம்பவங்களையும் அக்மால் கடுமையாகக் சாடியிருந்தார். அதிலும் குறிப்பாக பினாங்கிற்கே சென்று, எப்படி தேசியக் கொடியேற்றுவது என்பது குறித்து பாடம் நடத்தப் போவதாகவும் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
எனினும் சம்பந்தப்பட்ட முதியவர் விசாரணைக்காகக் கைதானதும், அத்திட்டத்தை அக்மால் கைவிட்டார்.