
காஜாங் – ஆகஸ்ட்-28 – இவ்வாண்டு தேசிய தினத்தை முன்னிட்டு மொத்தம் 626 கைதிகள் உரிம முறையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 77 பேர் காஜாங் சிறையிலிருந்து விடுதலையானவர்கள் என, சிறைச்சாலைத் துறையின் துணை கமிஷ்னர் ஜெனரல் Ahmad Faudzi Awang தெரிவித்தார்.
தேர்வு கடுமையான நிபந்தனைகள் அடிப்படையில் செய்யப்பட்டது — அதாவது குறைந்தபட்ச தண்டனை காலம், நன்னடத்தை மற்றும் உளவியல் பரிசோதனையில் தேர்ச்சி என அவர் விவரித்தார்.
ஜூலை வரை 13,844 கைதிகள் உரிமம் பெற்று விடுவிக்கப்பட்டனர்; ஒட்டுமொத்தமாக பார்த்தால் 23,000-க்கும் மேற்பட்டோர் உரிமம், பரோல் அல்லது PKW எனப்படும் கட்டாய வருகை உத்தரவு மூலம் விடுதலைச் செய்யப்பட்டனர்.
PBSL எனும் இந்த உரிமம் பெற்ற கைதி விடுதலை திட்டம் கைதிகளுக்கு, குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் திரும்ப வாய்ப்பு வழங்குவதுடன், அரசாங்கத்தின் சிறை மேலாண்மை செலவையும் குறைக்கிறது.
இத்திட்டத்தின் வாயிலாக 2024-ஆம் ஆண்டில் 29 மில்லியன் ரிங்கிட் சேமிக்கப்பட்டது; இவ்வாண்டு ஜூலை வரை மட்டும் 18.1 மில்லியன் ரிங்கிட் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.