Latestமலேசியா

தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலைய இடமாற்றத்திற்கு அரசாங்கமும் ஒப்புதல்; அமைச்சர் அறிவிப்பு

கோலாலம்பூர், மார்ச்-25- ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரம் ஒருவழியாக சுமூக தீர்வை எட்டியுள்ளது.

பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அக்கோயில் நிர்வாகம், தற்போதுள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் புதிய இடத்திற்கு மாறிச் செல்ல ஒப்புக் கொண்டுள்ளது.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தாஃபா அதனை அறிவித்தார்.

கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL வாயிலாக அரசாங்கம், அந்த ஆலய நிர்வாகம் மற்றும் நில உரிமையாளரான தனியார் நிறுவனத்துடனும் நடத்திய பேச்சுவார்த்தையில் அவ்விணக்கம் காணப்பட்டது.

ஆலய இடமாற்றத்திற்கு அடையாளம் காணப்பட்டுள்ள புதிய இடம், ஏறக்குறைய தற்போதுள்ள கோயில் அளவுக்கு 4,000 சதுர அடி நிலமாகும்.

அது, செக்ஷ்சன் 40, Lot PT 95 நிலத்தின் ஒரு பகுதியாகும் என்றார் அவர்.

எனினும், ஆலய இடமாற்றம், நடப்பு மேம்பாட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

இவ்வேளையில், தற்போதுள்ள கோயில் உடைக்கப்படாது என்ற உத்தரவாதத்தையும் அமைச்சர் சாலிஹா மறு உறுதிப்படுத்தினார்.

ஆலய இடமாற்றம் நல்லிணக்க உணர்வோடு நிறைவுப் பெறும் வரை, தற்போதுள்ள இடத்திலேயே அது தொடர்ந்து செயல்படும்; வழிபாட்டு நடவடிக்கைகளும் அதுவரை வழக்கம் போல் தொடரும்.

அதே சமயம், இந்த நல்லிணக்கத் தீர்வானது இந்த தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயத்திற்கு மட்டுமே; இனி வரும் காலங்களில் மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கும் இதையே ஒரு முன்மாதிரியாகக் கொள்ளக் கூடாது என சாலிஹா தெளிவுப்படுத்தினார்.

தலைநகர் DBKL கோபுரத்தில் நடைபெற்ற அச்செய்தியாளர் சந்திப்பில், துணையமைச்சர்களான டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், சரஸ்வதி கந்தசாமி, ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன், கோலாலாம்பூர் மேயர் டத்தோ ஸ்ரீ மைமூனா மொஹமட் ஷாரிஃப் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் பங்கேற்றனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!