தைப்பூசம் & கூட்டரசு பிரதேச தினத்திற்கான மாற்று விடுமுறையை கட்டாயம் வழங்க வேண்டும்

கோலாலம்பூர், டிசம்பர் 31 – அடுத்தாண்டு வரவிருக்கும் தைப்பூசம் மற்றும் கூட்டரசு பிரதேச தினம் பிப்ரவரி 1 ஆம் தேதியன்று அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று வருவதால், கூட்டரசு பிரதேச அரசு அறிவித்ததன்படி தனியார் துறை முதலாளிகள் பணியாளர்களுக்குக் கட்டாயமாக மாற்று விடுப்பை (cuti ganti) மறுநாள் திங்கட்கிழமை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளில் கூட்டரசு பிரதேச தினமான Hari Wilayah Persekutuan கட்டாய பொதுவிடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட அந்த நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால், ஞாயிறு ஓய்வு நாளாக நிர்ணயித்திருக்கும் நிறுவனங்கள் அடுத்த வேலை நாளான திங்கட்கிழமை அதாவது பிப்ரவரி 2ஆம் தேதியை மாற்று விடுப்பாக அறிவிக்க வேண்டும்.
அதேபோல், தைப்பூசம் தனியார் துறையின் விருப்ப பொதுவிடுமுறைகளில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தால், இரண்டு விழாக்களும் ஒரே நாளில் வந்து விட்டதால், அடுத்த வேலை நாளான செவ்வாய்க்கிழமை அதாவது பிப்ரவரி 3 ஆம் தேதியன்று மாற்று விடுப்பு வழங்கப்பட வேண்டும்.
தேவையெனில், முதலாளி மற்றும் பணியாளர் இருவரின் ஒப்புதலின் பேரில் விடுப்பை வேறு நாளுக்கு மாற்றிக் கொள்ளவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுவிடுமுறை தினத்தன்று பணிக்கு வருமாறு உத்தரவிடப்பட்ட பணியாளர்கள், வேலைச்சட்டத்தின் கீழ் அதிகப்படியான கூலி பெறும் உரிமையைப் பெற்றுள்ளனர்.
இந்த நடவடிக்கை, பணியாளர்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கும் முதலாளிகள் பொதுவிடுப்புச் சட்டத்தைக் கடைப்பிடிப்பதற்கும் அமல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



