
கோலாலம்பூர், ஆகஸ்ட்-7 – மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ராவின் கடந்த கால தோல்விகளுக்கு, ஒரு தொடர்ச்சியான தலைமைத்துவம் இல்லாததே காரணமாகும் என, அதன் நடப்புத் தலைவர் பி.பிரபாகரன் கூறியிருக்கிறார்.
இது இந்தியச் சமூகத்தை மேம்படுத்துவதற்கான நீண்டகால முயற்சிகளை சீர்குலைத்தது.
கடந்த பத்தாண்டுகளில், மித்ராவும் அதன் முன்னோடியான SEDIC எனப்படும் இந்திய சமூகத்திற்கான சமூகப் பொருளாதார மேம்பாட்டுப் பிரிவும் அடிக்கடி தலைமைத்துவ மாற்றங்களைக் கண்டதாக பிரபாகரன் நேற்று மக்களவையில் தெரிவித்தார்.
“பல தலைமைத்துவ மாற்றங்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு ஆண்டும், இயக்குநர் மாறுகிறார், தலைமை மாறுகிறது.
“அப்படி நடக்கும்போது, மித்ராவிலும் கொள்கைகள் மாறுகின்றன. ஒரு வருடம், ஒரு திட்டம் இருக்கிறது. அடுத்த ஆண்டு, ஒரு புதிய தலைவர் வருகிறார், அதோடு அந்தத் திட்டம் மறைந்துவிடுகிறது. அதனால்தான் உண்மையான மாற்றம் இல்லை” என்றார் அவர்.
இப்படியாக தொடர்ச்சி இல்லாததால் மித்ரா இந்தியச் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது என, 13-ஆவது மலேசியத் திட்டம் மீதான விவாதத்தின் போது பிரபாகரன் கூறினார்.
தனது பதவிக் காலத்தில், மித்ராவின் வழிகாட்டுதல் தனிப்பட்ட விருப்பங்களுடன் அல்லாமல் தேசியக் கொள்கைகளுடன் ஒத்துப்போவதை உறுதி செய்ததாகக் கூறினார்.
ஒருவேளை நாளையே தாம் மித்ராவில் இல்லாமல் போனாலும், அதன் வழிகாட்டுதல் அரசாங்கத்தின் கொள்கைகளுடன் ஒத்துப்போக வேண்டும்; அந்த நேரத்தில் அதை வழிநடத்துபவர்களின் விருப்பங்களுக்கு அதை விட்டுவிட முடியாது என அவர் சொன்னார்.
இவ்வேளையில் தனது தலைமையின் கீழ் மானிய விநியோகம் நியாயமாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் இருப்பதை உறுதிச் செய்து வருவதாகவும் பிரபாகரன் தெரிவித்தார்.