
கோலாலம்பூர், ஆகஸ்ட்-15- தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுரிமைத் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடி கொடுக்கப்பட்ட மகஜருக்கு தாம் ஆதரவு கொடுப்பதாக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கூறியுள்ளார்.
இது குறித்து சரியான நேரத்தில் மக்களவையில் குரல் எழுப்பவும் தாம் தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.
தோட்டப் பிரச்னைகள் மட்டுமின்றி இந்தியர்கள் எதிர்நோக்கும் எல்லா பிரச்னைகளுக்கும் மடானி அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என அவர் உத்தரவாதமளித்தார்.
தோட்டத் தொழிலாளர்கள் பிரச்னைக்கு ஆதரவுக் கொடுப்பதாக பாஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூறிக் கொண்டாலும், அதிகாரத்தில் இல்லாத அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.
அரசாங்கத்தால் மட்டுமே எதுவும் சாத்தியமாகும்; அவ்வகையில் பக்காத்தான் ஹராப்பான் மத்தியில் ஆட்சியில் இருக்கும் வரை இது போன்ற மக்கள் பிரச்னைகளுக்கு உரிய தீர்வுக் காணப்படும் என்றார் அவர்.
மக்கள் பிரச்னை குறித்து மனு கொடுக்க வந்தவர்களைச் சந்தித்த போது ராயர் அவ்வாறு கூறினார்.
தோட்ட நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்க வலியுறுத்தி, ஏராளமான தோட்டத் தொழிலாளர்கள் சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடியது குறிப்பிடத்தக்கது.