
கோலாலம்பூர், ஆகஸ்ட்-17- தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைப் பிரச்சனையை அரசாங்கம் நன்காராய்ந்து ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்துமென எதிர்பார்ப்பதாக, ஜோகூர் செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ராமதாஸ் கூறியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் நலன் காக்கப்படுவதை இதன் மூலம் உறுதிச் செய்ய முடியுமென, வீட்டுரிமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர் கொடுக்க வந்தத் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்த போது யுனேஸ்வரன் கூறினார்.
தனியார் நிர்வகிக்கும் தோட்டப் புறங்களில் ஆண்டாண்டு காலம் உழைத்தத் தொழிலாளர்களுக்கு, சேவைக் காலம் முடிந்ததும் குடியிருக்க வீடில்லை என்பது பெரும் அவலமாகும்.
இந்த சூழ்நிலையில் அவர்கள் எங்கே போவார்கள் எனக் கேள்வி எழுப்பிய யுனேஸ்வரன், மக்களவையில் 13-ஆவது மலேசியத் திட்டம் மீதான விவாதத்தில் இது குறித்து தாம் பேசியிருப்பதாகவும் சொன்னார்.
நாட்டின் விவசாய உற்பத்தித் துறையில் தோட்டப் பாட்டாளிகளுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு; எனவே அவர்கள் பணி ஓய்வுப் பெற்றதும் தங்குவதற்கு ஒரு வீடு வேண்டும் என்பது உட்பட அவர்களிள் நலன்களைக் காப்பது அரசாங்கத்தின் முக்கியக் கடமையாகும் என்றார் அவர்.
தோட்டத் தொழிலாளர்கள் சமர்ப்பித்துள்ள கோரிக்கைகள் அரசாங்கத்தின் காதுகளுக்கு எட்டி, ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுமென யுனேஸ்வரன் நம்பிக்கைத் தெரிவித்தார்.