கோலாலம்பூர், ஜன 2 – ‘இம்மாதம் 6ஆம் தேதி முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் நடைபெறும் பேரணியில் ஆயிரக்கணக்கான ம.இ.கா உறுப்பினர்கள் கூடுவர். கட்சி மற்றும் இனவாத அரசியலை தாண்டி நடைபெறும் இந்த பேரணியை ம.இ.காவின் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தற்காத்தார். நஜீப்பை வீட்டுக் காவலில் வைக்கும் கூடுதல் உத்தரவுக்கு நீதி கிடைப்பதற்கான நோக்கத்தில் இந்த பேரணி நடத்தப்படுவதாக அவர் கூறினார்.
நஜீப்பிற்கு ஒருமைப்பாட்டு ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த அமைதிப் பேரணிக்கு அரசியல் நோக்கம் எதுவும் கிடையாது என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டினார். நஜீப்பை வீட்டுக் காவலில் வைக்கும் கூடுதல் உத்தரவு குறித்த நஜீப்பின் முறையீடு மேல் முறையீடு நீதிமன்றத்தில் நடைபெறும் அதே தினத்தில் பாஸ் கட்சி ஏற்பாட்டிலான இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியில் அம்னோ ஏற்பாட்டில் 200 பஸ்கள் நஜீப் ஆதரவாளர்களை ஏற்றிக்கொண்டு புத்ரா ஜெயாவிலுள்ள நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டுவரும். பெர்சத்து தலைவர்களும் இந்த நிகழ்ச்சியல் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.