
கோலாசிலாங்கூர், ஜன 15 – பல்வேறு சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் லெஜென்டரி ரைடர்ஸ் கிளப் சிலாங்கூரில் உள்ள வசதிக் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 150 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு காலணிகள், பள்ளிச் சீருடைகள் மற்றும் பள்ளி உபகரனப் பொருட்களை வாங்குவதற்கு 150 ரிங்கிட்டிற்கான பற்றுச் சீட்டு வழங்கியது. பள்ளி புதிய கல்வி ஆண்டு விரைவில் தொடங்கவிருப்பதால் முன்கூட்டியே இந்த பற்றுச் சீட்டு ஞாயிற்றுக்கிழமையன்று கோலாசிலாங்கூர் இரண்டரை மைலில் உள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் வைக்கும் நிகழ்வில் வழங்கப்பட்டது. முதல் கட்டமாக சுமார் 40 பிள்ளைகளுக்கு இந்த பற்றுச் சீட்டு வழங்கப்பட்டதாக லெஜென்டரி ரைடர்ஸ் கிளப்பின் தலைவர் R .மகேந்திர மணி தெரிவித்தார்.
கிளப்பின் செயலாளர் T. ஜீவனந்தன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட இந்த நிகழ்சியில் தொழிலதிபர் டத்தோ சைமன் மாணவர்களுக்கான பற்றுச் சீட்டை வழங்கினார். குறைந்த வருமானம் பெறும் பிள்ளைகளின் கல்வி செலவுக்கான சிரமத்தை குறைப்பதற்கு இந்த உதவி பெரும் துணையாக இருக்கும் என அக்கிளப்பின் உறுப்பினரும் ஆலோசகருமான டாக்டர் நித்யா தியாகன் கூறினார்.
பொங்கல் திருநாளில் வசதிக் குறைந்த குடும்பங்களின் பள்ளிப் பிள்ளைகளுக்கு உதவும் உன்னத நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி அமைவதாக லெஜெண்டரி ரைடர்ஸ் கிளப்பின் ஆலோசகரான டாக்டர் மாறன் தெரிவித்தார்.
லெஜென்டரி ரைடர்ஸ் கிளப்பின் மற்றொரு சமூக நல உதவித் திட்டமாகவே புத்தாண்டில் அதுவும் பொங்கல் தினத்தில் மாணவர்கள் பயன்அடையும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக அந்த கிளப்பின் தோற்றுவிப்பாளரும் தலைவருமான மகேந்திர மணி கூறினார்.
உயர்ரக சி.சி மோட்டார்சைக்கிளை கொண்ட லெஜென்டரி ரைடர்ஸ் கிளப் ஒரு பொழுதுபோக்கு அமைப்பாக இருந்தாலும் நமது இந்திய சமூதாயத்திற்கு தேவைப்படும் உதவிகளை செய்து வருவதில் தயக்கம் காட்டியதில்லை. அந்த வகையில் அடுத்தடுத்து ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநிலத்தில் எஞ்சியுள்ள மாணவர்களுக்கு பற்றுச் சீட்டு உதவி வழங்கப்படும் என மகேந்திர மணி கூறினார்.