
கோலாலம்பூர், ஜனவரி-1 – அகால மரணமடைந்த தாதிமைப் பயிற்சியாளர் சாந்தி கிருஷ்ணனின் கடைசிச் செயலை வீரத்திற்கான அடையாளமாக, சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் புகழாரம் சூட்டியுள்ளார்.
சுகாதார அமைச்சின் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றிய சாந்தி, தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மரணத்திற்கு பின் தன் கண் கருவிழிப்படலத்தை தானமாக வழங்கியுள்ளார்.
“அவரது குடும்பத்தின் கண்களில் சோகம் இருந்தாலும், அதற்குள் ஒரு பெருமிதம் இருந்தது. சாந்தி தனது வாழ்க்கையை பிறரை பராமரிக்க அர்ப்பணித்ததோடு, இறுதி தருணத்திலும் ஒளியை வழங்கியுள்ளார்” என தனது ஃபேஸ்புக் பதிவில் அமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னதாக சாந்தியின் வீட்டுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்ததோடு குடும்பத்தாருக்கும் Dr சுல்கிஃப்ளி ஆறுதல் தெரிவித்தார்.
சாந்தியின் சேவை, அவரிடம் பயிற்சிப் பெற்ற மாணவர்கள் மூலமும், பார்வையைப் பெறும் பயனர்கள் வாயிலாகவும் தொடருகிறது…



