
கோலாலம்பூர் , ஏப் 8 – நாட்டின் மேம்பாட்டிற்காக அளப்பரிய பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் ஆற்றியுள்ள ம.சீ.சவின் முன்னாள் தலைவரான துன் டாக்டர் லிங் லியோங் சிக் வரலாற்றில் மட்டுமின்றி மக்களின் மனதில் என்றும் நீக்கமற நிறைந்திருப்பார் என ம.இ.காவின் தேசிய தலைவரான டான்ஸ்ரீ S.A விக்னேஸ்வரன் புகழாரம் சூட்டினார்.
17 ஆண்டு காலம் ம.சீ.சவின் தலைவராகவும், போக்குவரத்து அமைச்சராகவும் இருந்துள்ள டாக்டர் லிங்கின் சிறந்த தலைமைத்துவ பண்பினால் தேசிய முன்னணி கூட்டணி வலுவாக திகழ்ந்தது என இன்று அவரது நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியபின் வெளியிட்ட அறிக்கையில் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
போக்குவரத்து அமைச்சராக பணியாற்றிய காலத்தில் நாட்டின் விமான தொழில்துறை, கடல் துறை மற்றும் ரயில் சேவையின் மேம்பாட்டிற்கு அவர் சிறந்த பங்கை ஆற்றியுள்ளார்.
மறைந்த துன் டாக்டர் லிங் லியோங் சிக் நல்ல தலைமைத்துவ பண்பாளராக திகழ்ந்ததோடு போர்ட் கிள்ளானில் வேஸ்ட் போர்ட் துறைமுகத்தை மேம்படுத்துவதிலும், கே.எல்.ஐ.ஏ விமான நிலையம் நிர்மாணிப்பு திட்டத்திலும் துங்கு அப்துல் ரஸ்மான் கல்லுரி மற்றும் யுனித்தார் பல்கலைக்கழக வளர்ச்சியிலும் அவர் தீவிர முனைப்பு காட்டினார்.
ம.சீ.சவின் தலைவராக இருந்த அவர் பல இன மக்களின் ஒற்றுமைக்கு மட்டுமின்றி நாட்டின் மேம்பாட்டிற்கும் முன்னேற்றத்திற்கும் நாட்டின் தலைமைத்துவத்துடன் சேர்ந்து பாடுபட்ட உன்னத தலைவராகவும் விளங்கியுள்ளார்.
துன் டாக்டர் லிங் லியோங் சிக் மறைவினால் துயருறும் அவரது துணைவியார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் விக்னேஸ்வரன் தெரிவித்துக் கொண்டார்.



