
நாட்டில் நிலவும் கடும் வெப்பம்: வடகிழக்கு பருவமழையின் இறுதி கட்ட தாக்கம் – MetMalaysia
கோலாலம்பூர், பிப்ரவரி 12 –
தற்போது நாட்டில் நிலவி வரும் அதிக வெப்பமும் மழை குறைவுமான வானிலை, வடகிழக்கு பருவமழை காலத்தின் இறுதி பகுதியில் வழக்கமாக ஏற்படும் இயல்பான மாற்றம் என மலேசிய வானிலை ஆய்வு துறையான MetMalaysia தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி இறுதி முதல் மார்ச் நடுப்பகுதி வரை காணப்படும். குறிப்பாக தீபகற்ப மலேசியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டில், வெப்பமான மற்றும் உலர் காலநிலை டிசம்பர் 2025 இறுதியிலேயே தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு துறை தலைமை இயக்குநர் Dr Mohd Hisham Mohd Anip கூறுகையில், லா நினா (La Niña) என்ற காலநிலை நிகழ்வு மற்றும் பிராந்திய காற்றழுத்த மாற்றங்கள் இதற்கு காரணம் என விளக்கினார். இதனால் மழை மேகங்கள் அதிகமாக இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா பகுதிகளில் திரண்டுள்ளன. அதனால் மலேசியாவில் மழை குறைந்துள்ளது.
இந்த வெப்பமான நிலை மார்ச் நடுப்பகுதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர், இடை-பருவமழை காலம் தொடங்கி, நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.



