
சைபர்ஜெயா – ஆகஸ்ட்-19 – நாட்டிலேயே AI கல்விப் புலத்தைக் (FACULTY) அறிமுகப்படுத்திய முதல் தனியார் பல்கலைக் கழகமாக MMU எனப்படும் மலேசிய பல்லூடகப் பல்கலைக் கழகம் சாதனைப் படைத்துள்ளது.
FAIE என்ற பெயரில் அந்த AI மற்றும் பொறியியல் கல்விப் புலத்தை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சைபர்ஜெயாவில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
வடிவமைத்தல், செயல்படுத்துதல், ஒருங்கிணைத்தல் ஆகியத் திறன்களை வளர்ப்பதன் மூலம் மாணவர்கள் மத்தியில் AI-யின் தத்துவார்ந்த அடித்தளங்களில் வலுவான தேர்ச்சிக்கு அப்பால் AI-யின் விரிவான பயன்பாட்டை FAIE வலியுறுத்துவதாக MMU அறிக்கையில் கூறியது.
இந்த AI கல்விப் புலம், மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையத்தின் முதன்மை முன்னெடுப்புகளில் ஒன்றான AIX எனப்படும் AI உருமாற்ற மையத்தையும் கொண்டுள்ளது.
MMU – AIX இடையில் 37 மில்லியன் ரிங்கிட் மதிப்பில்லான கூட்டு ஒத்துழைப்பின் மூலம், இந்தக் கல்விப் புலம் புத்தாக்க மையங்களாக செயல்படக் கூடிய 13 அதிநவீன ஆய்வுக் கூடங்களையும் கொண்டிருக்கும்.
நேற்றைய அறிமுக விழாவில் MMU – AIXஇடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில், உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாம்ரி அப்துல் காடிட் உள்ளிட்டோரும் அதில் கலந்துகொண்டனர்.