
சிரம்பான், ஜூலை-29- ரொம்பின் அருகே சொந்தத் தந்தையாலேயே புதைக்கப்பட்ட 6 வயது சிறுவன் திஷாந்த், கேபிள் கம்பியால் கழுத்து இறுக்கப்பட்டு கொடூரமாகக் கொலையுண்டது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
சவப்பரிசோதனையில் அந்த அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்ததாக, நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் Datuk Ahmad Dzaffir Mohd Yussof தெரிவித்தார்.
ரெம்பாவ் மருத்துவமனையில் இன்று நண்பகல் 12 மணிக்குத் தொடங்கிய சவப்பரிசோதனை மாலை 4.20 மணியளவில் நிறைவுற்றது.
இந்நிலையில், சிறுவன் கொலைக்கான காரணம் குறித்து மேல் விசாரணைகள் தொடருகின்றன; என்றாலும், சந்தேக நபரான தந்தையிடம் நடத்தப்பட தொடக்கக் கட்ட விசாரணையில், அவ்வாடவர் குடும்பப் பிரச்னையை எதிர்நோக்கியிருந்ததும், மனைவியை விவாகரத்து செய்யும் நிலையில் இருப்பதும் தெரிய வந்துள்ளதாக, Ahmad Dzaffir சொன்னார்.
சந்தேக நபர் விசாரணைக்கு அவ்வளவாக ஒத்துழைக்கவில்லை என்றும் அவர் கூறினார். கடந்த வியாழக்கிழமை ஜோகூர் பாருவில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட திஷாந்த், நேற்று ஜெம்போலில் உள்ள புதர்ப்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது நாட்டையே உலுக்கியது.
உணவு வாங்கச் செல்லும் முன் மகனை காரில் தனியே விட்டுச் சென்றதாகவும், வந்துபார்த்த போது அவனைக் காணவில்லை என்றும், 36 வயது தந்தை முன்னதாக போலீஸில் புகார் செய்திருந்தார்.
இப்போது, பொய் புகார் செய்ததன் பேரில் 7 நாட்களுக்கு அவரைத் தடுத்து வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.