Latestமலேசியா

“நான் எப்போது கோயில்களை உடைக்கச் சொன்னேன்?” அன்வார் கேள்வி

“நான் எப்போது கோயில்களை உடைக்கச் சொன்னேன்?” அன்வார் கேள்வி

அலோர் ஸ்டார், பிப்ரவரி-14,

_”நான் எப்போது கோயில்களை உடைக்கச் சொன்னேன்?”_ என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோயில்கள் உட்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதே தமது வலியுறுத்தல் எனக் குறிப்பிட்ட அவர், ஒருபோதும் மற்ற சமயத்தாருக்கு எதிராக அதுபோன்ற செயலில் இறங்க மாட்டேன் என்றார் அவர்.

_”அரசியலமைப்புச் சட்டம் சமய சுதந்திரத்தை வழங்குகிறது. ஆனால் அனைத்தும் சட்டத்திற்குட்பட்டே… எல்லா கோயில்களையும் நாம் சொல்லவில்லை. சில கோயில்கள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளன. அவற்றின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்”_ என்றார் அவர்.

இங்கு மட்டுமல்ல… இந்தியா, சீனா என எந்த நாடாயினும் சட்டம் ஒன்றுதான். இந்தியாவில் இன்னும் கடுமையான சட்டம் உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

எனவே இவ்விஷயத்தில் சட்டத்திற்குட்பட்டு நடங்கள் என தாம் கூற வந்த அர்த்தத்தை சர்ச்சையாக்கி, ‘கலகம்’ செய்கிறார்கள் என அன்வார் சொன்னார்.

2 நாட்களாக நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டத்தில் கூட கோயில்களுக்கு எந்தவோர் எதிர்ப்பும் வரவில்லை; தீவிர இந்து மதப் பற்றாளரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தாம் கொண்டிருக்கும் நெருங்கிய நட்பு, இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றையும் சுட்டிக் காட்டிய அன்வார், இப்படியொரு சூழலில் தாம் எப்படி இந்து சமூகத்திற்கு எதிரான நிலைபாட்டை எடுக்க முடியும் என மறுகேள்வி கேட்டார்.

மலாய், சீனர், இந்தியர் என அனைவருக்குமே தாம் பிரதமர் என்றும், நல்லிணக்க மலேசியாவில் சட்டத்தின் மாண்பை கட்டடிக் காப்பதும் அவசியமாகும் என்றார்.

அலோர் ஸ்டாரில் நடைபெற்ற கெடா பி.கே.ஆர் மாநாட்டில் உரையாற்றிய போது கட்சித் தலைவருமான அன்வார் அவ்வாறு சொன்னார்.

மற்றவர் நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை “சுத்தப்படுத்த” ஊராட்சி மன்றங்களுக்கு அன்வார் உத்தரவிட்டிருந்தார்.

இது இந்துக்கள் மத்தியிலும் இந்து அமைப்புகள் மத்தியிலும் பெரும் குழப்பத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது.

தற்போது பிரதமர் தமது உத்தரவு தொடர்பில் இவ்விளக்கத்தை கொடுத்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!