
கோலாலம்பூர், டிசம்பர்-28- நாம் அறவாரியத்தின் ஏற்பாட்டில் ‘சோழர் வரலாறு’ மற்றும் ‘தி.மு.க ஆட்சியில் அயலகத் தமிழர் நலனும், தமிழ்மொழி வளர்ச்சியும்’ எனும் 2 நூல்கள் தலைநகரில் வெளியீடு கண்டுள்ளன.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தலைமையேற்று நூல்களை வெளியீடு செய்தார்.
சோழ மன்னர்களில் அயல்நாட்டுக்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் தமிழ் மன்னன் ராஜேந்திரன்; அந்தப் படையெடுப்பு என்பது வெறும் போர் அல்ல. தமிழரின் கடல்சார் அறிவு, தன்னம்பிக்கை என சரவணன் தமதுரையில் குறிப்பிட்டார்.
மலேசியத் தமிழர்கள் குறிப்பாக மாணவர்களுக்கு எளிதாக புரியும் அளவுக்கு குறிப்புகள் வடிவில் இப்புத்தகம் உள்ளது.
இவ்விரு நூல்களையும் கடல் கடந்து மலேசியத் தமிழர்களுக்கும் அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி என, நூலாசிரியர் S.K. ஸ்ரீ தரன் கூறினார்.
சிறப்பு வருகைத் தந்த தமிழகத்தின் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் Dr கலாநிதி வீராசாமியும், காலத்திற்கு ஏற்ற ஒன்றென நூல்களைப் பாராட்டினார்.
இந்நூல் வெளியீட்டு விழாவில் டத்தோ வீரா சாஹூல், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அயலகத் தலைவர் பெ.ராஜேந்திரன், மாஹ்சா தோற்றுநர் முஹமட் ஹனிஃபா, லண்டனில் அயலகத் தூதராக உள்ள முஹமட் ஃபைசால் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
சுமார் 100 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், அனைவருக்கும் நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டன.



