
புத்ராஜெயா, ஜூலை-28- எல்லை மோதல்களைத் தீர்க்க தாய்லாந்தும் கம்போடியாவும் இன்று நள்ளிரவு முதல் “உடனடி மற்றும் நிபந்தனையற்ற” போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
ஆசியான் கூட்டமைப்பின் தலைவராக புத்ராஜெயாவில் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தலைமைத் தாங்கிய அன்வார், இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான பொதுவான புரிதலை இரு தரப்பினரும் எட்டியுள்ளதாகக் கூறினார்.
கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட்டும் (Hun Manet) தாய்லாந்து இடைக்கால பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய்யும் (Phumtham Wechayachai) இருவரும் அதற்கு ஒப்புக் கொண்டிருப்பதாக, புத்ராஜெயாவில் கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் கூறினார்.
அமைதிப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவைப் பாராட்டிய ஹுன் மானெட்டும் பும்தமும், அன்வார் முன்னிலையில் செய்தியாளர் சந்திப்பின் முடிவில் கைகுலுக்கினர்.
கடந்த வியாழக்கிழமை எல்லையில் ஏற்பட்ட கண்ணிவெடி குண்டு வெடிப்பில் 5 தாய்லாந்து வீரர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து சண்டை வெடித்தது.
இதனால் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டதோடு இரு தரப்பிலும் 260,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
மோதல்களைத் தொடங்கியதற்காக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி, தூதர்களையும் திரும்பப் பெற்றனர்.
இந்நிலையில், ஆசியாவின் தலைவர் என்ற முறையில் இவ்விரு அண்டை நாடுகளுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்து வைத்து, மலேசியா போரை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.