
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்-20 – மலாயாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், தனது நிர்வாணப் படங்களை மாணவர்களுக்கு அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து, உயர் கல்வி அமைச்சு மௌனம் காப்பதாக ஒரு மாணவர் அமைப்பு சாடியுள்ளது.
UMFC எனப்படும் UM Feminism Club அமைப்பின் தலைவர் Chin Jes Weng, இன்று மலாயாப் பல்கலைக்கழக வேந்தர் மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவ்வாறு சொன்னார்.
அதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவுக் கரம் தேவைப்பட்ட நேரத்தில் அமைதி காத்த மற்ற மாணவர் அமைப்புகளையும் அவர் சாடினார்.
பாலியல் தொல்லைகளை எதிர்த்துப் போராடுவோம் என பல்கலைக்கழகத் தேர்தலில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறந்து விட்டதாக அவர் சொன்னார்.
முன்னதாக, Chin-னும் பாலினப் படிப்பு முதுகலைப் பட்டதாரி எஸ். இந்திரமலரும், மலாயாப் பல்கலைக்கழக நெறிமுறைப் பிரிவின் தலைவர் Nur Syazwani Rosli-யிடம் மகஜரொன்றைச் சமர்ப்பித்தனர்.
விசாரணைகள் முடியும் வரை, சம்பந்தப்பட்ட பேராசிரியரை உடனடியாக இடைநீக்கம் செய்வது, பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டை விரிவாக விசாரிப்பது, பாலியல் தொல்லை மீதான UM-மின் கொள்கைகளில் சீர்திருத்தம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை அம்மகஜர் வலியுறுத்துகிறது.
WAO எனப்படும் மகளிர் உதவி அமைப்பு, Suaram என்றழைக்கப்படும் மலேசிய மக்கள் குரல் உள்ளிட்ட 27 அரசு சார்பற்ற அமைப்புகள் அந்த மகஜரை ஆதரிக்கின்றன.
சம்பந்தப்பட்ட பேராசிரியர் குறித்து புகார் கிடைத்திருப்பதை டிசம்பர் 18-ம் தேதி மலாயாப் பல்கலைக்கழகம் உறுதிபடுத்தியது.
எனினும், அது அதிகாரத் தரப்பின் விசாரணையிலிருப்பதால் அது குறித்து மேலும் கருத்துரைக்க மறுத்து விட்டது.