
ஜோகூர் பாரு, அக்டோபர்-1,
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலநடுக்கங்களுக்கு தயாராக, MBJB எனப்படும் ஜோகூர் பாரு மாநகர மன்றம், அங்குள்ள கட்டடங்களின் பாதுகாப்பு அம்சங்களை மீளாய்வு செய்வது தொடர்பில், விரிவான ஆய்வை மேற்கொள்ளவுள்ளது.
நடப்பிலுள்ள கட்டடங்கள் மற்றும் புதியத் திட்டங்களுக்கு புதிய SOP தரநிலைகள் தேவைப்படுகிறதா என்பதை ஆராய்வதே அதன் நோக்கம் என, மேயர் Datuk Haffiz Ahmad தெரிவித்தார்.
எதிர்பாராத நில நடுக்கம் ஏற்பட்டாலும், கடுமையான சேதங்களைத் தடுக்க கட்டடங்கள் தாங்கி நிற்கும் வலிமை பெற்றிருக்க வேண்டும் என்றார் அவர்.
இந்த கட்டட ஆய்வுகள், வெறும் உயரமான கட்டடங்களை மட்டுமல்லாமல், பொது வசதிக் கட்டமைப்புகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புகளையும் உள்ளடக்கியிருக்கும்.
அதில் MBJB, பொதுப் பணித் துறையான JKR, தீயணைப்பு துறை, வானிலை ஆய்வு துறை, புவியியல் துறை, தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனமான NADMA மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பணியாற்றும்.
இந்த ஆய்வின் முடிவுகள் ஊராட்சி மன்றங்கள் மட்டுமல்லாமல், மேம்பாட்டாளர்கள், குத்தகைத்தாரர்கள் மற்றும் கட்டட உரிமையாளர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும்.
பொது மக்கள் பாதுகாப்பையும், பேரிடர்களுக்கு எதிரான நகரின் தயார் நிலையையும் மேம்படுத்துவதே MBJB-வின் நீண்ட கால திட்டமாகும் என்றார் அவர்.