Latestமலேசியா

நெகிரி செம்பிலான் நெருக்கடி: சிறுபான்மை அரசாங்கமாகத் தொடரும் அமினுடின் ஹருண் நிர்வாகம்

சிரம்பான், ஏப்ரல்-27-நெகிரி செம்பிலானில் பாரிசான் நேஷனல் (BN) தனது ஆதரவை மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, தற்போதைய மாநில நிர்வாகம் ஒரு ‘சிறுபான்மை அரசாங்கமாக’ செயல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை, அம்னோவின் 14 சட்டமன்ற உறுப்பினர்களும் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண் மீதான தங்களது ஆதரவை அதிகாரப்பூர்வமாக மீட்டுக் கொண்டனர்.

நெகிரி சமஸ்தானாதிபதி தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆட்சியைத் தொடரத் தேவையான 19 இடங்களுக்கும் குறைவாக, அதாவது வெறும் 17 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே பக்காத்தான் கொண்டுள்ளது.

இந்தச் சூழலில், மாநிலத்தின் நிலைத்தன்மையை உறுதிச் செய்ய பாரிசானுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்கத் தயாராக இருப்பதாக, எதிர்கட்சியான பெரிக்காத்தான் நேஷனல் (PN) அறிவித்துள்ளது; அதன் வசம் 5 இடங்கள் இருப்பதால் மொத்தமாக 19 இடங்களுடன் அங்கு பாரிசான் – பெரிக்காத்தான் அரசு அமைக்க முடியும்.

இந்நிலையில், மதியம் வாக்கில் சமஸ்தானாதிபதி துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை நேரில் சென்று கண்டு திரும்பிய அமினுடினோ, மாநில அரசு வழக்கம் போல் செயல்பட அவர் உத்தரவிட்டதாகக் கூறியுள்ளார்.

எனவே, தற்போதைய நிர்வாகம் கலைக்கப்படும் வரை அல்லது புதிய பெரும்பான்மை நிரூபிக்கப்படும் வரை, அமினுடின் ஹருண் தலைமையிலான அரசு ஒரு சிறுபான்மை அரசாங்கமாகவே செயல்படுவது உறுதியாகியுள்ளது.

சிறுபான்மை அரசாங்கம் என்ற வகையில் அரசியல் சட்ட ரீதியாக மாநில நிர்வாகம் தொடர்ந்து செயல்பட முடியும் என்றாலும், முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிக்கல்கள் எழக்கூடும்.

எனவே, அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் நெகிரி அரண்மனையின் முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!