
கம்பார், ஏப் 9 – வடக்கு -தெற்கு நெடுஞ்சாலையில் 308ஆவது கிலோமீட்டரில் MPV வாகனத்தை துரத்திச் சென்ற கார் ஒன்று திடீரென சாலையின் நடுப்பகுதியில் நின்றதைத் தொடர்ந்து மூன்று கார்கள் மோதிக்கொண்ட விபத்து நிகழ்ந்தது. குடும்பத்தில் ஏற்பட்ட தவறான புரிந்துணர்வினால் இந்த வாகனத்தை துரத்தும் சம்பவம் ஏற்பட்டதாக தெரிகிறது.
தனது தங்கை அவரது காதலனுடன் MPV Proton Ertiga MPV வாகனத்தில் சென்றதைத் தொடர்ந்து அந்த வாகத்தை துரத்தும் நடவடிக்கையில் Honda City காரை ஓட்டிய ஆடவர் ஈடுபட்டபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
நேற்று காலை மணி 10.46 அளவில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து தெடர்பில் தாங்கள் இரண்டு புகார்களை பெற்றதாக கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan முகமட் நஸ்ரி டாவுட் தெரிவித்தார். இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படாவிட்டாலும் விபத்திற்கு முன்னதாக குற்ற அம்சம் நடந்துள்ளதாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
வாகனங்களில் ஒன்று நெடுஞ்சாலையின் வலதுபுறத்தில் திடீரென நின்றதால் பின்னால் வந்த இரண்டு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன.
வாகனத்தை துரத்தும் நடவடிக்கை செர்டாங்கில் தொடங்கியதால் அது தொடர்பான குற்ற அம்சத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்படி செர்டாங் போலீஸ் தலைமையகம் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக முகமட் நஸ்ரி தெரிவித்தார்.