கோலாலம்பூர், நவ 26 – பகடி வதையில் ஈடுபடும் மாணவர்களின் மனநலப் பிரச்னைகளைக் கையாள்வதில் கல்வி அமைச்சு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது.மேலும் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய பல அம்சங்களை தமது தரப்பு அமல்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் தெரிவித்தார். உணர்ச்சிகரமான பிரச்சனைகளுக்கு உள்ளான மாணவர்களை அடையாளம் காண, முன்கூட்டியே கண்டறியும் ஆரோக்கியமான மனநிலை பரிசோதனையை கல்வி அமைச்சு செயல்படுத்துகிறது.
ஆரோக்கியமான மன நிலை பரிசோதனை ஐந்தாம் ஆண்டு முதல் ஆறாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் கடுமையான உணர்ச்சியமான விவகாரங்கள் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை பரிசோதிக்கப்படுகிறார்கள் என்று அவர் விளக்கினார். பகடிவதையினால் மோசமாக பாதிக்கப்பட்ட மாணவர்களை உள்ளடக்கிய சோகமான சம்பவம் தொடர்பாக கோப்பேங் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கார் ஹிங் ( Tan Kar Hing ) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது பட்லினா இத்தகவலை வெளியிட்டார். ஒவ்வொரு மாணவருக்கும் உளவியல் ஆதரவை கல்வி அமைச்சு வழங்கி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.