
கோலாலம்பூர், டிசம்பர்-29,
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் உள்ள உறவைத் தொடர வேண்டுமா, துண்டிக்க வேண்டுமா என்பதை தீர்மானிப்பதற்காக, வரும் ஜனவரி 3-ஆம் தேதி அம்னோ இளைஞர் பிரிவு சிறப்பு மாநாடு நடத்துகிறது.
அதன் தலைவர் டத்தோ Dr முஹமட் அக்மால் சாலே அதனை அறிவித்தார்.
என்னதான் ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் இணைந்து ஆட்சி நடத்தினாலும், அம்னோ – DAP இடையிலான உறவு நீறு பூத்த நெருப்பு போலவே உள்ளது.
அதனை மேலும் மோமாக்கும் வகையில்,
DAP-யைச் சேர்ந்த பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் Yeo Bee Yin, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் வீட்டுத் காவல் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததை சமூக ஊடகத்தில் பாராட்டினார்.
இதனால் கொதித்தெழுந்த அம்னோவினர், அவரைக் கடுமையாக சாடியதோடு அலுவலகத்திற்கே சென்று போராட்டம் நடத்தினர்.
Yeo Bee Yin மன்னிப்பு கேட்க மறுத்ததால், அம்னோ வட்டாரத்தில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.
அப்போதே, ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ விலகுவது தான் நல்லது என அக்மால் கூறியிருந்தார்.
இந்நிலையில், “அம்னோவின் போராட்டத்தை நேசிக்கும் மலாய்க்காரர்கள் அனைவரும் ஜனவரி 3 மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க வேண்டும்” என்று வீடியோ வாயிலாக அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இளைஞர் பிரிவு தான் என்றாலும், இந்த மாநாட்டின் முடிவு, ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது.



