
பண்டிகைக் காலத்தில் காசநோய் பரவும் அபாயம் அதிகரிப்பு – நிபுணர்கள் எச்சரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி 16 –
சீனப் புத்தாண்டு முதல் நோன்பு பண்டிகை வரை நடைபெறும் பண்டிகைக் காலத்தில் சமூகச் சந்திப்புகள் மற்றும் கூட்டங்கள் அதிகரிப்பதால், மலேசியாவில் காசநோய் அதாவது Tibi பரவும் அபாயம் உயரக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Galen மையத்தின் தலைமை செயல் அதிகாரி அஸ்ருல் முகமட் காலிப் (Azrul Mohd Khalib) கூறுகையில், காசநோய் காற்றின் மூலம் பரவும் தொற்று நோய் என்பதைக் குறிப்பிட்டார்.
திறந்தவீட்டு நிகழ்ச்சிகள், நெரிசலான பொதுப் போக்குவரத்து, பணியிடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் போன்ற மூடிய மற்றும் கூட்டம் கூடிய இடங்களில் தொற்று பரவும் வாய்ப்பு அதிகமுள்ளது.
அபாயம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், 80 விழுக்காட்டிற்கும் அதிகமான தொற்றுகள் வீடுகளுக்கு வெளியே ஏற்படுகின்றன என்பதை காட்டுகின்றன.
ரமலான் மாதத்தில் நடைபெறும் கூட்டுத் தொழுகைகள் மற்றும் மத நிகழ்வுகளும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படாவிட்டால், தொற்று அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
வயதானவர்கள் மற்றும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். தொடர்ந்து நீடிக்கும் இருமல், இரத்தத்துடன் இருமல், திடீர் உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.



