கோலாலம்பூர், ஜனவரி 20 – அறுவடைத் திருநாளான பொங்கலை முன்னிட்டு, தேசிய அளவில் ஒற்றுமை பொங்கல் விழாவை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானமும், மலேசிய இந்து ஆலய – இந்து அமைப்புகளின் ஒருங்கிணைப்பு பேரவையான மஹிமாவும் இணைந்து மிகச் சிறப்பாக நேற்று ஏற்பாடுச் செய்திருந்தன.
பத்துமலையில் கோலகலமாக நடந்தேறிய இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ம.இ.காவின் தேசிய தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன், ம.இ.காவின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன், ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஸ்ரீ ஆர்.நடராஜா மற்றும் அவர் தம் துணைவியார் புவான் ஸ்ரீ மல்லிகா நடராஜா உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
காலையில் இந்தியக் கலாச்சார மையம் திறப்புவிழாவுடன் ஒருசேர சமயம், கலை, கலாச்சாரத்துடன் கொண்டாடப்பட்ட இந்த தமிழர் திருநாள், பத்துமலைக்கு வரலாற்றுப்பூர்வமான நாளாக அமைந்ததாக தமதுரையில் டத்தோ ஸ்ரீ சரவணன் புகழாரம் சூட்டினார்.
அதன்பின்னர், ஒற்றுமைப் பொங்கல் விழாவை தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜாவின் துணைவியார் புவான் ஸ்ரீ மல்லிகா, குத்துவிளக்கேற்றி, மலர் தூவி, தீபாரதணை காட்டி, பொங்கல் புதுப்பானையில் பால் ஊற்றி, நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து டான்ஸ்ரீ நடராஜா, டத்தோஸ்ரீ சரவணன், டத்தோ சிவகுமார் ஆகியோர் புதுப்பானையில் பால் ஊற்றியப் பின்னர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
மாலை 3 மணிக்கு தொடங்கிய இவ்விழாவில், கிராமிய நடனங்கள், வழுக்குமரம் ஏறுதல், கையிறு இழுத்தல், தோரணம் பின்னுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் இடம்பெற்றன.
அதேவேளையில், மஹிமா அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஆலய நிர்வாகத்தினரும் பொதுமக்களும் இணைந்து 200 பொங்கல் பானைகளில் ஒருசேர பொங்கலிட்டு விழாவை மேலும் சிறப்பித்ததை மஹிமாவின் தலைவரும் தேவஸ்தானத்தின் அரங்காவலருமான டத்தோ சிவக்குமார் தெரிவித்தார்.
மஹிமா அமைப்பின் கீழ் உள்ள 10 கோயில்களுக்கு வளர்ச்சி நிதியாக நேற்று மொத்தம் 50,000 ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இது போன்ற விழாக்கள் மக்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்ப்பதுடன், சந்தோஷத்தையும் மனநிறைவையும் அளிப்பதாக சிலர் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தனர்.
இந்த தேசிய பொங்கல் விழாவில் முக்கிய பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.