
ஜோகூர் பாரு, ஜன 23 – பத்து பஹாட்டில் சாலையில் ஏற்பட்ட தகராறு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பின்னர் தீர்வு காணப்பட்ட போதிலும் இந்த சம்பவம் குறித்த பொது விவாதம் ஆன்லைனில் தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஒப்புக்கொண்டதை தொடர்ந்து இரண்டு ஓட்டுநர்கள் சம்பந்தப்படட மோதல் புதன்கிழமையன்று தீர்க்கப்பட்டது.
வர்த்தகப் பகுதியில் மினி கூப்பர் ஒன்று இரட்டை வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது மற்றொரு வாகனத்திற்கு தடையாக இருந்ததால் சர்ச்சை தொடங்கியதாக கூறப்படுகிறது.
ஒரு பெண் தனது காரை வெளியேற்ற அருகிலுள்ள கடையிலிருந்து வெளியே வருவதற்கு முன்பு ஒரு ஆடவர் தனது வாகனத்திலிருந்து மீண்டும் மீண்டும் ஹார்ன் அடிப்பதைக் பரவலாக பகிரப்பட்ட காணொலியில் பார்க்க முடிந்ததோடு அதனைத் தொடர்ந்து வாக்குவாதம் கடுமையாகியது.
சம்பந்தப்படட் பெண் மன்னிப்புக் கேட்டுக்கொண்டபோதிலும் அருகிலிருந்த பலர் அவரை கண்டித்தனர். அதன் பின் வெளிவந்த இதர வீடியோக்களில் பத்து பஹாட் நகரத்தின் மற்றொரு பகுதியில் ஆண்கள் குழுவால் அந்த பெண் சூழப்பட்டதோடு அவரது தலையில் கைவைத்து தள்ளப்படும் காட்சியையும் காணமுடிந்தது.
இதனிடையே சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் புதன்கிழமையன்று பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டதை பத்து பாஹாட் போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ஷாருலானுவார் முஷாடாட் அப்துல்லா சானி ( Shahrulanuar Mushaddat Abdullah Sani ) உறுதிப்படுத்தினார்.



