
கோலாலாம்பூர், ஜூலை-2 – AI அதிநவீனத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோவால், Kuak Hulu-வில் இல்லாத கேபிள் காரை இருப்பதாக நம்பி, கோலாலம்பூரிலிருந்து பேராக் பயணமாகி, ஒரு வயதான தம்பதியர் ஏமாந்து போயிருக்கின்றனர்.
சென்ற இடத்தில் கேபிள் கார் இல்லாததால் அவர்கள் மனமுடைந்தனர். Threads சமூக ஊடகத்தில் @dyaaaaaaa._ என்ற பயனர் பகிர்ந்த அப்பதிவு தற்போது வைரலாகியுள்ளது.
அத்தம்பதியர் உள்ளூர் ஹோட்டலில் check-in செய்து, கேபிள் காரைப் பற்றி தகவல் கேட்டபோது தன்னால் நம்ப முடியவில்லை என அப்பெண் கூறினார்.
“முதலில் அவர்கள் சொன்னதைக் கேட்டு நகைச்சுவை என்று நினைத்தேன். ஆனால், கேபிள் காருக்காகவே கோலாலம்பூரிலிருந்து வந்ததாக அவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்” என்றார் அவர்.
அது AI-யால் உருவாக்கப்பட்ட வீடியோ என அப்பெண் சொல்லிய போதும், அது நிச்சயமாக போலியாக இருக்காது என, மூதாட்டி கூறினார்; காரணம், அந்த வீடியோவில் ஒரு செய்தியாளர் இருந்தாராம்.
எவ்வளவோ விளக்கிய பிறகும், அவர்கள் நம்பவில்லை. கேபிள் காரை பார்க்கச் செல்கிறோம் என பிள்ளைகளிடம் சொன்னால் கூச்சமாக இருக்குமென்றெண்ணி, அவர்களிடமும் விஷயத்தைக் கூறாமல் இருவரும் பேராக் பயணமாகியுள்ளனர்.
கடைசியில் ஒருவழியாக உண்மையை ஏற்றுக் கொண்டவர்கள், ‘வீடியோவிலிருந்த செய்தியாளர்’ மீது வழக்குப் போடப் போவதாக கூறினர்.
அதுவும் போலியே…AI-யால் உருவாக்கப்பட்டதே என அப்பெண் விளக்கிய போது, இப்படியெல்லாம் மக்களை ஏமாற்ற முடியுமா என சம்பந்தப்பட்ட மூதாட்டி ஆச்சரியத்தில் கேட்டாராம்.
இது நம் பெற்றோருக்குக் கூட நிகழலாம்; எனவே பெற்றோர்கள் வெளியில் சென்றால், எங்கே போகிறீர்கள் என கேட்டு வைப்பது பாதுகாப்பானதே என, அப்பெண் தனது பதிவில் கூறியுள்ளார்.