
பத்து பஹாட், அக்டோபர் 28 –
பத்து பஹாட் ரெங்கிட் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட சண்டையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒன்பது ஆண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, ஆடவர் ஒருவர் உணவகத்தில் சத்தமாக நடந்து கொண்டதால் மற்ற வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு ஏற்பட்டது என்றும் இதுவே சண்டைக்கு முக்கிய காரணமாக அமைந்ததென்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் அனைவரும் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் வருகின்ற வியாழன் வரை அனைவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருலனுவார் முஷாடாட் அப்துல்லா சானி (Shahrulanuar Mushaddat Abdullah Sani) கூறினார்.
இதற்கிடையில், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் காணொளியில் சிலர் வாக்குவாதத்திற்குப் பிறகு மோட்டார்சைக்கிளை கவிழ்த்ததும், பின்னர் மேசை, நாற்காலி, ஹெல்மெட் போன்றவற்றை ஒருவர்மீது ஒருவர் எறிந்து சண்டையிட்டதையும் காண முடிந்தது.
அந்த நேரத்தில் கடையில் உணவருந்தி கொண்டிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் சண்டையை நிறுத்த முயன்றபோதிலும், பல பொருட்கள் சேதமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.



