
பத்து பஹாட், மார்ச்-11 – ஜோகூர், பத்து பஹாட், கம்போங் ஸ்ரீ காடிங்கில் உள்ள வீட்டில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப மாது மரணமடைந்ததை அடுத்து, ஓர் ஆடவர் கைதாகியுள்ளார்.
3 குழந்தைகளுக்குத் தாயான 31 வயது அம்மாது ஞாயிறு இரவு சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதனால் போலீஸ் அச்சம்பவத்தை கொலையாக மறுவகைப்படுத்தி, சந்தேக நபரைக் கைதுச் செய்தது.
கொலைக் குற்றச்சாட்டின் பேரில் மார்ச் 15 வரை அந்நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இரவு 9 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்திற்கு முன், அம்மாதுவுக்கும் அவருக்கு அறிமுகமானவர் என நம்பப்படும் 29 வயது அவ்வாடவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றி, கடைசியில் பெட்ரோல் எண்ணெய் மற்றும் lighter-ரை அந்நபர் பயன்படுத்த, வீடு தீப்பற்றிக் கொண்டது.
தீ வேகமாகப் பரவி மேலே பட்டதில் இருவருமே தீப்புண் காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அம்மாதுவின் உடலில் 74 விழுக்காட்டுத் தீப்புண் காயங்கள் ஏற்பட்ட வேளை, சந்தேக நபரின் உடல் 14 விழுக்காடு வெந்துபோனது.
எனினும் சிகிச்சைப் பலனளிக்காமல், ஞாயிறு இரவு மை 9.45-க்கு அம்மாது உயிரிழந்தார்.