
பத்து மலை, ஜனவரி-14-2026 பொங்கல் விழாவை வழக்கம் போல் சிறப்பாகக் கொண்டாட
பத்து மலையில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் தை முதல் நாளான நாளை, ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவாஸ்தானத்திற்கு உட்பட்ட 3 கோயில்களிலும் தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்படுமென, அதன் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா கூறினார்.
வீட்டில் சூரியப் பொங்கல் வைக்க உகந்த நேரங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
இவ்வேளையில் ஜனவரி 17, சனிக்கிழமை பத்து மலை வளாகத்தில் தேசிய ஒற்றுமை பொங்கல் விழா மற்றும் திருப்புகழ் நூல் வெளியீடும் நடைபெறுகிறது.
காலையில் பாரம்பரிய நடனங்களும், 11 மணிக்கு மேல் பொங்கல் போட்டிகளும் நடைபெறும் என அவர் சொன்னார்.
மாலை 4.30 மணிக்கு பத்துமலை திருத்தலத்தில் புதிதாக கட்டப்பட்ட சுவாமி மண்டபம் மற்றும் தண்ணீர் பந்தல் கட்டடத் திறப்பு விழாவும் நடைபெறும்.
பின்னர் திருப்புகழ் நூல் வெளியீடு தொடங்கும்.
தான் ஸ்ரீ நடராஜா தலைமையுரையாற்ற, ஆன்மீக வாழ்த்துரையை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் வழங்குகிறார்.
தமிழகத்திலிருந்து சிறப்பு வருகைப் புரியவுள்ள பிரமுகரின் திருப்புகழ் பேருரரையும் இடம்பெறவுள்ளதாக நடராஜா கூறினார்.
இரவு அன்னதானத்துடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது.
எனவே பக்தகோடிகள் திரளாக வந்து இந்நிகழ்வினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.



