
ஈப்போ, அக்டோபர்-3 – சிலாங்கூர் பத்து மலையில் வேட்டைக்குச் சென்ற போது நண்பரால் ஓர் ஆடவர் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், போலீசார் நான்காவது நபரை கைதுச் செய்துள்ளனர்.
50 வயது சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை மாலை கெரியான் போலீஸ் தலைமையக வளாகத்தில் கைதுச் செய்யப்பட்டதாக, பேராக் போலீஸ் தலைவர் Noor Hisam Nordin கூறினார்.
அவரிடமிருந்து கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.
அவ்வாடவர் போதைப்பொருள் உட்கொண்டதும் பரிசோதனையில் உறுதியானது; என்றாலும் அவருக்கு பழையக் குற்றப்பதிவுகள் எதுவும் இல்லை.
உயிரிழந்த 43 வயது நபரின் நெஞ்சில் துப்பாக்கிச்சூட்டு காயங்கள் இருந்ததை உடற்கூறு அறிக்கை உறுதிச் செய்துள்ளது.
முன்னதாக, 32 முதல் 36 வயதிலான மூவர் கைதுச் செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர், மரணமடைந்தவரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்டையாடும் போது காட்டு மிருகம் என தவறாக நினைத்து நண்பர் சுடப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
பின்னர், உடலை மூன்று வாகனங்களில் கொண்டுச் சென்று, கெரியான், செமாங்கோல் பகுதியில் உள்ள ஒரு சாலையோரத்தில் அவர்கள் போட்டுச் சென்றுள்ளனர்.
இதையடுத்து மூன்று வாகனங்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள், 11 குண்டுகள் மற்றும் கைப்பேசிகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.