
கோலாலாம்பூர், செப்டம்பர்-22,
பத்து மலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் இவ்வாண்டுக்கான RM100,000 நன்கொடை நிதியிலிருந்து இதுவரை RM72,000 பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆலயத் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா அதனை இன்று அறிவித்தார்.
அவற்றில், 5 மாணவர்களுக்கு தலா RM5,000 கல்வி உதவி நிதியும், ஒரு மாணவருக்கு படிப்புக்கான மடிக்கணினியும் வழங்கப்பட்டது.
இது தவிர, கிள்ளான் ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில், லாபுவான் திருமுருகன் ஆலயம் மற்றும் மாணவர் முழக்கம் அரையிறுதிச் சுற்று ஆகியவற்றுக்கு தலா RM5,000 நன்கொடை அளிக்கப்பட்டது.
மொத்தத்தில், 7 மாணவர்கள் மற்றும் ஒரு மடிக்கணினி பெறுநர் இந்த கல்வி உதவித் திட்டத்தின் பயனடைந்துள்ளதாக, பத்து மலையில் நடைபெற்ற இந்த உதவி நிதி மற்றும் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியில் நடராஜா தெரிவித்தார்.
உதவிப் பெற்ற மாணவர்கள் வணக்கம் மலேசியாவுடன் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
இதனிடையே, விரைவில் நடைபெறவுள்ள பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் முழு வீச்சில் போய்க் கொண்டிருக்கின்றன.
அதே சமயம், திருமணங்கள் மற்றும் சமூக நிகழ்ச்சிகளுக்காகக் கட்டப்பட்டுள்ள கோயிலின் புதிய மண்டபமும் அடுத்தாண்டு தைப்பூசத்திற்கு பிறகு திறக்கப்படவுள்ளதாக நடராஜா சொன்னார்.
கோவில் காரியங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளில் அடுத்தடுத்த மாதங்களில் மேலும் பல முன்னேற்றங்களை சமூகம் எதிர்பார்க்கலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.