
பத்து மலை – ஆகஸ்ட்-2 – பத்து மலைத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் ஆலயத்தில் நேற்று தொடங்கி 3-நாள் விழாவாக மகா சண்டி ஹோமம் நடைபெறுகிறது.
இது சக்திவாய்ந்த மற்றும் மிகவும் புனிதமான இந்து சடங்குளில் ஒன்றாகும்.
துர்கை அம்மனைப் போற்றும் வகையில் நடக்கும் இந்த சண்டி ஹோமத்தின் நேற்றைய முதல் நாளில், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா பங்கேற்றார். இதில் கணபதி பூஜை, புண்ணிய வாசனம், விநாயகர் கும்ப பூஜை, சங்கல்பம் ஆகியவை நடத்தப்பட்டன.
மகா சண்டி ஹோமம் என்பது லட்சுமி, சரஸ்வதி பார்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் ஒருங்கிணைந்த ஆற்றல்களை உள்ளடக்கிய ஒரு சக்திவாய்ந்த வேத நெருப்பு சடங்காகும்.
இந்நிகழ்வில் 3 நாட்களுக்கு பல்வேறு சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெறுவதால், இந்துப் பெருமக்கள் திரளாக வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.