
புது டெல்லி, ஏப்ரல்-24- அப்பாவி மக்கள் 26 பேரை பலி கொண்ட ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணமென, இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
சூட்டோடு சூடாக பாகிஸ்தானுடனான தனது எல்லையையும் இந்தியா மூடியுள்ளது.
தூதரக அதிகாரிகளைத் திருப்பியனுப்பி, இராஜதந்திர உறவுகளையும் குறைத்து உத்தரவிட்ட இந்திய அரசு, பாகிஸ்தானுடனான நீர் பகிர்வு ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைத்துள்ளது.
அந்த பயங்கரவாதத் தாக்குதலில், பாகிஸ்தானுக்கும் ‘எல்லை கடந்த’ தொடர்பு இருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முன்னதாகக் கூடிய இந்திய அமைச்சரவை முடிவுச் செய்தது.
எனினும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் காட்டப்படவில்லை.புது டெல்லியின் குற்றச்சாட்டுகளை இஸ்லாமாபாத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஏராளமானோர் உயிரிழந்திருப்பது வருத்தமளித்தாலும், அதில் தங்களுக்கு தொடர்பேதுமில்லை என பாகிஸ்தான் கூறிக் கொண்டது.
தடைச் செய்யப்பட்ட பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பாகக் கருதப்படும் TRF கிளர்ச்சிப் படையே இந்த ஜம்மு-காஷ்மீர் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது.
இந்துக்களைக் குறி வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 26 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்ட வேளை 17 பேர் காயமடைந்துள்ளனர்.