
புத்ராஜெயா, அக்டோபர் 4 – விஸ்மா ட்ரான்சிட் கோலாலம்பூருக்கு வெளியே தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலஸ்தீனியர்களில், ஒருவர் அதிருப்தியில், அதிகாரி மீது செருப்பை வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த அக்டோபர் 2ஆம் திகதி, அந்த பாலஸ்தீனியர் குழுவில் ஒருவரை விஸ்மா ட்ரான்சிட்டிலிருந்து வெளியே தங்க முடியாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால், கோபமடைந்த அவர்கள் விஸ்மாவிலுள்ள பூச்சாடிகளை உடைத்து, அங்குள்ள அலங்காரங்களை சேதப்படுத்தியுள்ளனர்.
அதில் ஒருவர் அதிகாரியின் மீது செருப்பை வீசியதாகவும் கூறப்படுகிறது.
பாலஸ்தீன தூதரகத்தின் பிரதிநிதிகளும் உடனிருந்தும், இச்சம்பவத்தைத் தடுத்த நிறுத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான காணொளி ஒன்று மிகவும் வைரலாகி வரும் நிலையில், ஒரு சிலரின் தவறான செயல்களுக்காக ஒட்டுமொத்த பாலஸ்தீன அகதிகளையும் குற்றம் சாட்டுவதைத் தவிர்க்குமாறு, பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் (Datuk Seri Muhamed Khaled) பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.