
பயான் லெப்பாஸ், பினாங்கு, ஆகஸ்ட் 29- பாயான் லெப்பாஸ் சுங்கை அரா, தாமான் துனாஸ் மூடாவில் மனைவியை வெட்டிய ஆசிரியர், தனிப்பட்ட நபரிடம் கடன் வாங்கியதாக வெளியான குற்றச்சாட்டுகளை காவல்துறை முற்றிலும் மறுத்துள்ளது.
சந்தேக நபர் ஆன்லைனில் வாங்கிய பொருட்களின் தவணை செலுத்தவும், பங்கு முதலீட்டிற்காக வங்கிக் கடன் பெற்றிருந்தது ஆகிய அனைத்தும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தனிப்பட்ட முறையில் ஒருவரிடம் கடன் பெற்றார் என்ற குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும் மாறாக, அவர் ஒரு சட்டபூர்வ நிதி நிறுவனத்தின் மூலம் வங்கிக் கடன் பெற்றுள்ளார் என்பதையும் போலீஸ் தரப்பு விளக்கியது.
மேலும் அத்தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட தகராறின் காரணம் கடன்தான் என்பதைக் காவல்துறை விசாரணை உறுதி செய்துள்ளது.
கடந்த புதன்கிழமை அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில், 28 வயது மனைவியை கழுத்தில் வெட்டி காயப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் சந்தேக நபர் தன்னையும் அதே கத்தியால் காயப்படுத்திக் கொண்டார்.
தற்போது இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.