
கோலாலம்பூர், பிப் 6 – பெர்லீஸ் , கங்காரில் உள்ள ரப்பர் தோட்டத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த கடத்தப்பட்ட ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு கடத்தல் கும்பலின் நடவடிக்கையும் முறியடிக்கப்பட்டது.
பெர்லீஸ் வனவிலங்கு குற்றப் பிரிவு மற்றும் பெர்லீஸ் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை உறுப்பினர்கள் பெர்லீசில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த செயல் திட்டத்தின் விளைவாக அந்த கடத்தல் கும்பலின் நடவடிக்கை வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின்போது சுல்காட்டா ஆமை, இந்திய நட்சத்திர ஆமை, பர்மிய நட்சத்திர ஆமை, இலை ஆமை, கருப்பு சதுப்பு நில ஆமை உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட ஆமைகளுடன் அதன் முட்டைகளும் கண்டுப்பிடிக்கப்பட்டன.
அதோடு மூன்று உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டதோடு கிட்டத்தட்ட 287,395 ரிங்கிட் மதிப்புள்ள வனவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அனைத்து சந்தேக நபர்களும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 2010 (சட்டம் 716) இன் கீழ் விலங்குகளை வைத்திருப்பதற்கான செல்லுபடியாகும் உரிமங்கள் அல்லது அனுமதிகளை சமர்ப்பிக்கத் தவறிவிட்டனர் என பெர்லீஸ் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறையான Perhelitan தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் காதிர் அபு ஹாஷிம் ( Abdul Kadir Abu Hashim ) தெரிவித்தார்.



