
புத்ரா ஜெயா, ஜன 9 – நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் இருக்கும் CCTV எனப்படும் ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் 28 விழுக்காடு மட்டுமே செயல்பட்டு வருவதால் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பாதுகாப்பு விவகாரங்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் ( Fadhlina Sidek) வலியுறுத்தினார்.
குறைந்த விழுக்காட்டிலான CCTV செயல்பாட்டினால் பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினரின் நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அமைச்சும் பள்ளி நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
28 விழுக்காடு CCTV மட்டும் செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்பதால் இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது நமது பொறுப்பாகும் என இன்று கல்வி அமைச்சில் புத்தாண்டு உரை நிகழ்த்திய பின் செய்தியாளர் கூட்டத்தில் பட்லினா தெரிவித்தார்.
நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மேலும் 300 CCTV கேமராக்களை தனது அமைச்சு பொருத்தியுள்ளதோடு இதற்கான பராமரிப்பு முறைகள் ஒழுங்காக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
மாநில கல்வித் துறைகள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் CCTV கேமராக்கள் செயல்படுவதை உறுதிப்படுத்துமாறு தாம் அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.



