பள்ளி மண்டபங்களில் மதுபானத் தடையை மறுபரிசீலனை செய்யுங்கள்; அன்வாருக்கு தெப்ராவ் MP கோரிக்கை

கோலாலம்பூர், அக்டோபர்-24,
பள்ளிக்கூட மண்டபங்களில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட முழுமையான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு, ஒரு முக்கிய எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
“அனைவருக்கும் ஒரே மாதிரியான” கொள்கை என்பது தாய்மொழிப் பள்ளிகளுக்கு பாதகமாக இருக்கலாம் என்று ஜோகூர், தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம்மி புவா (Jimmy Puah) எச்சரித்தார்.
பள்ளி வளாகங்களை மதுவிலிருந்து விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் நோக்கம் ஏற்கத்தக்கதே என்றாலும், சீன மற்றும் தமிழ் வழிப் பள்ளிகளில் இந்தக் கொள்கையின் தாக்கம் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக நிதிவளம், சுயாட்சி உள்ளிட்டவற்றை அது பாதிக்கலாம் என்றார் அவர்.
“தாய்மொழிப் பள்ளிகளில் யாரும் மதுபான கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில்லை; நன்கொடைத் திரட்டுவதற்கு மட்டுமே பள்ளி மண்டபங்கள் பயன்படுத்தப்படுகின்றன; அதுவும் பள்ளி நேரம் முடிந்து, மாணவர்கள் அல்லாத நிகழ்ச்சிகளில் மட்டுமே”
எனவே, பொத்தாம் பொதுவாக கட்டுப்பாடுகளை கொண்டு வருவதை விட, சீன மற்றும் தமிழ்ப் பள்ளிகளின் சூழல்களைப் புரிந்து இந்தக் கொள்கை மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என ஜிம்மி வலியுறுத்தினார்.
முன்னதாக, கல்வி மதிப்புகள் மற்றும் பள்ளிச் சூழல்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மேற்கோள் காட்டி, பள்ளி வளாகங்களில் பள்ளி நேரத்திற்குப் பிறகும் கூட நடைபெறும் நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறப்படக் கூடாது என்று அன்வார் மக்களவையில் கூறியிருந்தார்.
இதற்கு சீன சமூகத்தின் மத்தியில் கடும் அதிருப்தியும் கண்டனமும் எழுந்துள்ளது.



