
கோலாலம்பூர், ஜன 13 – சரவாக் மாநில அரசு அண்மையில் செயல்படுத்தியுள்ள முன்னேற்றமான முயற்சியை முன்மாதிரியாகக் கொண்டு, நாடு முழுவதிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதியை அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என ம.இ.கா வின் தேசிய உதவித் தலைவரான டத்தோ டி. முருகையா கேட்டுக் கொண்டுள்ளார்.
சரவாக் மாநிலம் முழுவதும் மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதி நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை கருத்திற்கொண்டு தற்போது பயன்பாட்டில் உள்ள பள்ளி பேருந்துகளை உடனடி மற்றும் நடைமுறைத் தீர்வாக அரசு பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு மாணவருக்குமான போக்குவரத்து செலவையும் அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளவதன் மூலம் பெற்றோர்களின் நிதிச் சுமையை குறைக்க முடியும் . அதோடு இலவச பள்ளி போக்குவரத்து திட்டம் காலை நேர போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்குக் கொண்டு செல்லும் அவசரம் மற்றும் மன அழுத்தத்தைத் தணிக்கவும் உதவும். எனவே இதற்கு உறுதியான அரசியல் மனப்பான்மையும் ஒருங்கிணைந்த நடவடிக்கையும் மட்டுமே தேவையென முருகையா சுட்டிக்காட்டினார்.
கல்வி அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் சேவையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென டத்தோ முருகையா வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.



