கராச்சி, அக்டோபர்-7 – பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள ஜின்னா அனைத்துலக விமான நிலையமருகே ஏற்பட்ட வெடிப்பில் சீன நாட்டு பிரஜைகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானிலுள்ள சீன தூதரகம் அதனை உறுதிப்படுத்தியது.
பாகிஸ்தானியர்கள் சிலரும் அதில் கொல்லப்பட்டதோடு, காயமும் அடைந்துள்ளனர்.
எனினும் மொத்த மரண எண்ணிக்கை இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை.
ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த அச்சம்பவத்துக்கான காரணம் தெரியவரவில்லை.
என்றாலும், அத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதாக, பலுச்சிஸ்தான் பிரிவினைவாத இராணுவம் (BLA) அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது.
பொறியியலாளர்கள் உள்ளிட்ட சீன பிரஜைகளைக் குறி வைத்து அத்தாக்குதல் நடத்தப்பட்டதாக BLA கூறியது.
வடமேற்கு பாகிஸ்தான் பிரதேசமான பலுச்சிஸ்தானின் சுதந்திரத்திற்காக போராடி வரும் அக்கும்பல், சீன நிலைகளைக் குறி வைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
பலுச்சிஸ்தானில் இயற்கை வளங்களைச் சுரண்டுவதில் இஸ்லாமாபாத்துக்கு பெய்ஜிங் துணை நிற்பதே BLA-வின் குற்றச்சாட்டாகும்.
அப்பகுதியில் பணிபுரியும் சீன நாட்டவர்களையும் கராச்சியிலுள்ள சீன பேராளரகத்தையும் BLA இராணுவம் ஏற்கனவே தாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.